×

சுதந்திரம் கிடைத்து சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் வந்தது: ஒரு விரல் புரட்சிக்கு காரணமான அழிக்க முடியாத ‘மை’ சுவாரஸ்யம்

சென்னை: கள்ள ஓட்டுப்போவதை தடுக்கும் வகையில் ஓட்டு போடுபவர்களின் கை விரலில் வைக்கப்படும் அழிக்க முடியாத “மை” பற்றிய சுவாரஸ்ய தகவல். இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் திருவிழா அடுத்த மாதம் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. மொத்தம் 544 தொகுதிக்கு நடைபெற உள்ள தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 39 ெதாகுதிகள் உள்ளன. இந்த 39 தொகுதிகளுக்கான வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் சக்திகளாக 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில் பெண் வாக்காளர்களே அதிகம். அதாவது, 3 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 665 பேர். குறிப்பாக, 18 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்கள் மட்டும் 10 லட்சத்து 92,420 பேர். இவர்கள் இந்த மக்களவை தேர்தலில் புதிதாக வாக்களிக்க உள்ளனர். அப்படிப்பட்ட தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கு ஒரே கட்டத்தில் அடுத்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் தேர்தல் களமும் அனல் பறந்து வருகிறது.

வாக்காளர்களை கவரும் வகையில் கட்சிகளின் பிரசாரம் நடந்து வருகிறது. அதே நேரத்தில் தேர்தலில் ஒருவரின் வாக்கை மற்றவர்கள் போட்டு விடக்கூடாது. ஒருவர் பல ஓட்டுக்களை போட்டு விடக்கூடாது, கள்ள ஓட்டை தடுக்கும் வகையில் வாக்களிப்பவர்களின் கைகளில் அழியா மை வைக்கப்படுகிறது. அதாவது வாக்காளர்களின் இடது கையின் ஆள்காட்டி விரலில் விரல் நகமும், சதையும் இணையும் இடத்தில் ஒரு கோடு போன்று தீட்டப்படுகிறது இந்த மை. விரலில் வைக்கப்படும் இந்த மையை அவ்வளவு எளிதாக அழித்து விட முடியாது. இதன் உண்மையான நிறமே ஊதா தான். இந்த மையை கையில் வைக்கும் போது, புற ஊதா வெளிச்சம் இந்த மையின் மீது பட்டு, அதன் அடர்த்தி 7 முதல் 25 சதவீதமாக மாறும். அப்போது மை, மனித சருமத்தின் செல்களில் கலந்து விடும். எனவே, அந்த மையை அழிக்க முடியாது.

அந்த மை முதல் 3 அல்லது 4 நாட்களுக்கு ஊதா நிறத்திலும், பிறகு அடர் நிறத்திலும் மாறிவிடும். முதல் 10 நாட்கள் வரை இந்த மை பளிச்சென்று காட்சியளிக்கும். அதன் பிறகு தான் அதன் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மங்க தொடங்கும். அதாவது, மை வைத்த சருமத்தில் இருக்கும் செல்கள் முற்றிலும் அழிந்து, புதிய செல்கள் உருவாகும் போது தான் கையில் வைத்த இந்த மையானது முற்றிலும் மறையும். அதே வேளையில் வாக்காளர் கையில் வைக்கப்பட்ட மை, அந்த இடத்திலிருக்கும் நகம் வளர்ந்து வெட்டப்படும் வரை அப்படியே தான் இருக்கும். சுமார் 4 மாதங்கள் வரை ஆகலாம். அவ்வளவு சிறப்புமிக்க ைமயை கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பெயின்ட் அண்டு வார்னிஷ் லிமிடெட் என்ற நிறுவனம்தான் உற்பத்தி செய்கிறது. இந்த மக்களவை தேர்தலுக்கும் கர்நாடக அரசின் நிறுவனமான மைசூர் பெயின்ட்ஸ் அண்டு வார்னிஷ் லிமிடெட் (எம்பிவிஎல்) 26.5 லட்சம் குப்பி அழியாத மையை தயாரிக்க இந்திய தேர்தல் ஆணையம் கோரியிருந்தது. இது தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெறப்பட்ட மிகப்பெரிய ஆர்டராக பார்க்கப்படுகிறது.

ஒரு குப்பியில் இருக்கும் 5 மில்லி மையை கொண்டு 300 வாக்காளரின் விரல்களில் தீட்டலாம். அதே நேரத்தில் இந்த மை நிரப்பப்பட்ட பேனாவை வைத்து 600 பேருக்கு மை வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதன்முதலாக இந்தியாவுக்கு விடுதலை கிடைத்து சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின் கர்நாடகத்தில், அப்போது மைசூரில் நடந்த பொதுத் தேர்தலில் இந்த அழியாத மை பயன்படுத்தப்பட்டது. அப்போது வாக்காளரிடம் அடையாள அட்டை கூட கிடையாது. அதற்காக தான் இந்த மை பயன்படுத்தும் முறை கொண்டு வரப்பட்டது. பிறகு அடையாள அட்டை பயன்பாட்டுக்கு வந்ததது. அதன் பிறகும், ஒருவர் பல வாக்குகள் போடுவதை தடுக்கும் வகையில் இந்த மை வைக்கும் முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, சுமார் 25 உலக நாடுகளுக்கும் இந்த அழியாத மையை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

The post சுதந்திரம் கிடைத்து சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் வந்தது: ஒரு விரல் புரட்சிக்கு காரணமான அழிக்க முடியாத ‘மை’ சுவாரஸ்யம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,India ,18th parliamentary election festival ,
× RELATED சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தடையை...